Monday, September 24, 2012

இலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தேவைதானா?

eathuvarai.net

சிரேஷ்ட விரிவுரையாளர்-யாழ் பல்கலைக்கழகம்
இரு மாதங்களிற்கு மேலாகத் தொடரும் இலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் பல்கலைக்கழகங்கள் யாவற்றினதும் கல்விச்செயற்பாடுகள் நின்று போய் உள்ளன. மேற்படி தொழிற் சங்க நடவடிக்கையின்  தேவை குறித்து ஆராய்வதற்காக இக்கட்டுரை வரையப்படுகின்றது.
இலங்கை அரச இலவசக்கல்வி முறையானது பெருமைப்படக் கூடிய உயரியதொரு சாதனை மாத்திரமன்றி போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டிய தொன்றுமாகும். இன்று உயர் பதவிகளில் இருக்கும் பலரும் அப்பதவிகளுக்கு வருவதற்கு அரச இலவசக்கல்வி துணைபுரிந்துள்ளது. கற்பதற்கான அவர்களது உரிமை அன்று பாதுகாக்கப் பட்டிருந்ததால்தான் அதன் பயனை இன்று அவர்கள் அனுபவிக்கின்றனர். எனவே வருங்கால சந்ததிக்காக அரச இலவசக் கல்வி முறையினை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இலவசக் கல்வியானது தரமானதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அது தனது அர்த்தத்தினை இழந்து விடும்.
கல்வி என்பது விற்பனைக்குரியதொரு பண்டமல்ல என நாம் கருதுகின்றோம். அரச இலவசக் கல்வியின் சமாதியின் மேல் தனியார் கல்வித்துறை கட்டியெழுப்ப முயலக்கூடாது. அமையவிருக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை விற்கும் ஸ்தாபனங்களாகவன்றி தகுதியிருந்தும் உயர்கல்வி வாய்ப்பை இழந்து நிற்கும் மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பை வழங்கும் கல்விக் கூடங்களாக அமைய வேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 04-07-2012 முதலாக தொடர்ச்சியான முழு அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அரச இலவசக் கல்வி முறை பாதுகாக்கப்படுவதோடு தரம் உயர்த்தவும் படவேண்டும் என்பது முதலாவது கோரிக்கையாகும்.
இலங்கையின் தனிநபர் வருமானம் ஏனைய தெற்காசிய நாடுகளைக் காட்டிலும் அதிகமாய் உள்ளது. ஆனாலும் கல்விக்கான அரச ஒதுக்கீட்டில் நாம் ஏனைய  தெற்காசிய நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின் தங்கியுள்ளோம். இலங்கையைப் பொறுத்தவரையில் உயர்கல்வியில் தனியாரின் முதலீடு இல்லை. இலங்கையில் உயர் கல்வி சம்மந்தமான பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் எனும் போது எமது நாட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்றையவற்றை விட அதிகமாயிருத்தல் அவசியம். இலங்கையில் கா.பொ.த (உ/த) பரீட்சையின் அதி சிறந்த 20சத  மாணவர்களே அரச பல்கலைக்கழகங்களிலுள் உள்வாங்கப்படுகின்றார்கள். அச்சிறந்த மாணவர்களுக்கு  தரமான கல்வியை வழங்க வேண்டாமா?
UNESCO வினது முன்மொழியிற்கமைவாக மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 6வீதத்தினை கல்வித்துறைக்கு ஒதுக்குமாறு FUTA கோருகின்றது. இலங்கையை தொற்காசியாவின் ஒரு அறிவியல்மையமாக மாற்றவுள்ளதாக அரசு கூறுகின்றது. அவ்வாறாயின் ஏற்கனவே இங்கு அறிவியல் மையங்களாக உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வித்துறைக்கான அரச நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படல் வேண்டும். ஆனாலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடும் படியாக குறைவடைந்து செல்கின்றது.
இலங்கையின் கல்வி வீழ்ச்சிக்கு அரசின் பாராமுகமின்றி நிதிப்பற்றாக்குறை காரணமல்ல. கல்விக்கான நிதி ஒதுக்கீடு நாட்டின் வளர்ச்சிக்கான  அத்திவாரம். எமது அரசு நாட்டின் அபிவிருத்திக்கு கல்விமான்கள் அவசியமில்லை எனக் கருதுகின்றது போலும். இந் நிலை தொடர்ந்தால் இலங்கை எதிர் காலத்தில் தொழிற்சார் உத்தியோகங்களிற்கான மனித வாழ்விற்கு இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டி வரலாம். அது மட்டுமன்றி காலப்போக்கில் இலங்கை இன்னுமொரு பப்புவா நியுகினி தீவுகளாயினும் ஆச்சரியப்பட முடியாது.

இந்நாட்டின் கல்வித்துறைக்கான நீண்டகால தெளிவான கொள்கையை அரசு கொண்டிருப்பதோடு அதனை மக்களுக்கும் தெளிவுபடுத்தல் வேண்டும். காலத்துக்கு காலம் எவ்விதமான கலந்தாலோசனைகளும் இன்றி மேற் கொள்ளப்படும் கல்வி சீர்திருத்தங்கள் மாணவர்களை பாதிப்பனவாக அமைகின்றன அண்மைய Z– புள்ளி தொடர்பான அரசின் தெளிவற்ற போக்கால் உயர்தர மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளனர் ,பல இளமாணவர்களது கனவுகள் கலைக்கப்பட்டுள்ளன.
இன்று பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் அரசியல் தலையீடுகளில் பலிக்கடாக்களாக மாறியுள்ளதை அனைவரும் அறிவர். இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தமது சுயாதீனத்தையும் சுதந்திரத்தையும் அரசியல் வாதிகளிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டன. இந்நிலை தொடர்ந்தால், பல்கலைக்கழகங்கள் கோமாளிகளின் கூடாரங்களாகிவிடும். அதன் தொடர்ச்சியாக அவை தமது நம்பகத்தன்மையை இழந்து விடுவதுடன், அவற்றால் வழங்கப்படும் பட்டங்கள் தமது அங்கிகாரத்தினையும் இழந்து விடும். இந் நிலை எமக்கு வேண்டாம்.
2008ம் ஆண்டு ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்டபடி தகுதிவாய்ந்த கல்வியியாளர்களை இணைத்துக் கொள்ளல் மற்றும் தக்கவைத்துக் கொள்ளல் என்பவைக்கேற்றவாறு தமது சம்பளம் மீள் நிர்ணயம் செய்யப்படும் என எண்ணி 2011ம் ஆண்டுவரை காத்திருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் 2011ம் ஆண்டு தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆனாலும் பின்னர் அரசாங்கம் அளித்த உறுதிமொழிக்கிணங்க FUTA மேற்படி தொழிற்சங்க நடவடிக்கையினை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. FUTA  வின் கோரிக்கைகளை இரு கட்டங்களாக அமுல் படுத்துவதற்கு அரசு இணங்கியது. முதலாம் கட்டம் உடனடியாக அமுல் படுத்துவதாகவும் ஏனைய கட்டங்களை பின்னர்தொடர்ச்சியாக அமுல் படுத்துவதாகவும் இணங்கப்பட்டது. ஆனாலும் இரண்டாம் கட்ட உடன்படிக்கை அமுல்படுத்தப்பட வில்லை. அமுல்படுத்தப்படாத உடன் படிக்கையின் ஏனைய கட்டங்களை அமுல்படுத்துமாறு கோருவதே  FUTA வினது தற்போதைய இரண்டாவது கோரிக்கையாகும்.
பல்கலைக்கழகங்ளின் தரம் அப்பல்கலைக்கழக ஆசிரியர்களின் தரத்தில் தங்கியுள்ளது. இலங்கை பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் பல துறைகளுக்கு பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பதவிகள் நிரப்பப்படுவதற்கு தகுதியன விண்ணப்பதாரிகள் இல்லாமல் காலம் காலமாக வெற்றிடமாகவே உள்ளன. எமது நாட்டில் ஒரு பேராசிரியரைக் கூட கொண்டிராத சில பல்கலைக்கழகங்களும் உள்ளன என்பது வேதனையானதொரு உண்மை.
இலங்கை பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான துறைசார்ந்த பீடங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்களின் பெரும்பாலானவர்கள் மேலேத்தேய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தமது கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர்களாய் உள்ளனர். இலங்கை பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் வேதனம் போதாது எனக்கருதின் இவர்களால் இலகுவாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்பை பெற முடியும். எமது நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையிலும் கற்றோரின் வெளியேற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கலாநிதி பட்டப்படிப்பை முடித்த 550க்கு மேற்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் அண்மைக் காலத்தில் நாடு திரும்ப மறுத்துவிட்டனர் என்கிறார் உயர் கல்வி அமைச்சுச் செயலாளர். இந் நிலை தொடர்ந்தால் எதிர் காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் போதிப்பதற்கு தகுதியான ஆசிரியர்களே இல்லாமல் போகலாம்.
அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் FUTA  ஈடுபட்டுள்ளது. இலங்கையின் பெரிய சாதனைகளில் ஒன்றாகிய, அனைவருக்கும் கிடைக்கக்கூடியதும் தரமானதுமான இலவசக் கல்வி அழிக்கப்படுவதை கைகட்டி வேடிக்கை பார்த்த சந்ததியினர் நாமென, எம்மை எதிர்கால சந்ததி குறிப்பிட அனுமதித்தலாகாது.
இலங்கையின் கல்வியியலாளர்கள் தமது நீண்ட மௌனத்தைக் கலைத்திருக்கின்றார்கள். அந்நாட்டில் நீண்ட காலமாக நடைமுறையிலிருந்து வரும் இலவசக்கல்விக்கு பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்து கொண்ட இலங்கையின் வடக்குக் கிழக்கு அடங்கலான அனைத்துக் கல்வியியலாளர்களும் போராட ஒன்றினைந்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் மிகப்பெரிய தொழிற்சங்க நடவடிக்கையாக இது நோக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமானது FUTA  தமது பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு மேலதிகமாக ஒரு மில்லியன் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் கையெழுத்துப்போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளது. FUTA வினது தொழிற்சங்க நடவடிக்கையினை முதலில் கல்வியியலாளர்கள் தமது சம்பள அதிகரிப்புக்காகவே மேற்கொள்கின்றார்கள் என தவறாகப் புரிந்து கொண்ட பொதுமக்கள் காலப்போக்கில் தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கங்களைப் புரிந்து கொண்டுள்ளனர். தற்போது போராட்டத்திற்கான மக்களாதரவு அதிகரித்துவருகின்றது. இதுவரை 200,000க்கு மேற்பட்ட கையெழுத்துக்களை FUTA சேகரித்துவிட்டது.
அண்மையில் FUTA  நடாத்திய பேரணியில் 60க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கெடுத்து தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களும் FUTA விற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்ததையடுத்து அச்சம் கொண்ட அரசு அனைத்துப்பல்கலைக்கழகங்களையும் மூடுவதாக அறிவித்திருந்தது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இக்கல்வியியலாளர்களின் எழுச்சியானது சர்வதேசக்கவனத்தை கவர்ந்துள்ளது. இரு மாதங்களுக்கு மேலாக தமது ஊதியங்களைப்பெறாது உறுதியுடன் போராடிவரும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் நிதிப்பிரச்சனையைப்போக்க FUTA ஒரு நிதியத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்வமுள்ள எவரும் உலகின் எப்பாகத்திலுமிருந்து இந்நிதியத்திற்கு பண உதவி செய்யலாம்.
எதிர்வரும் வாரங்களில் மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து ஆரம்பித்து தலைநகரை நோக்கிய நடைபவனி ஒன்றினை நடாத்த FUTA தீர்மானித்துள்ளது. ஆனாலும் அரசாங்கமானது தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பதுடன்  FUTA வுடனான பேச்சுவார்த்தைகளுக்கு  இணங்க மறுத்தும் வருகின்றது.
௦௦௦௦
—————————————————————————————————————————————————
**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************
—————————————————————————————————————————————————

No comments: