Sunday, September 2, 2012

அரசுடனான பேச்சுக்கள் பலனளிக்கவில்லை: விரிவுரையாளர்கள்



போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்
போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்
இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திவருகின்ற பணிபுறக்கணிப்பு தொடர்பாக நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள் சம்மேளனம் தெரிவித்திருக்கின்றது.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விடயங்களின் மூலம் தீர்வு காணப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆயினும் அதில் பல விடயங்கள் குறித்து தெளிவில்லை.
கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவது தொடர்பில் காலவரையறை குறிப்பிடப்படவில்லை என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள் சம்மேளனத்தின் பொருளாளர் பவித்ரா கைலாசபதி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதேவேளை, பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளில் உள்ள அரசியல் தலையீடு உட்பட்ட பல விடயங்கள் நீக்கப்பட்டு பல்கலைக்கழகங்கள் மீண்டும் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு வழிசமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு தரப்படமாட்டாது என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருப்பதாகத் தெரிவித்த பவித்ரா கைலாசபதி, பல்கலைக்கழக ஆசிரியர்களை விசேட பிரிவின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற தமது யோசனை குறித்து அமைச்சரவை பத்திரத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் அதனை நாடளாவிய ரீதியில் மக்கள் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் பவித்ரா கைலாசபதி தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தாங்கள் உணர்ந்துள்ளபோதிலும், தமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கின்ற அரசாங்கமும் அதில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பவித்ரா கைலாசபதி கூறினார்.

No comments: